Tuesday, October 2, 2007

பானையின் ஒரு பருக்கை



நெரிசலற்ற
இரவு நேர வீதியில்
காலைப்பொழுதின் இயலாமையை
துடைத்தெறிய விரைந்து
கடக்கும் மாநகர பேருந்தில்
இச்சையை கைபற்றும் வேகத்தோடு
உயிரை தவறவிட்டேறும்
நொடிபொழுதில்
கடவுளாகி மீண்டும்
அதுவானது ஓர் படிக்கம்பி!


வழித்தவற முற்பட்ட கணத்தில்
சற்றுமுன் உலகம் சமைத்த
யன்னலோர இருக்கை தேவையற்றுபோக
வெளியிறங்கிய எனை
சேருமிடம் சேர்த்து
இன்னும் தொடர்கிறது
அந்த சிற்றுந்து
பொறுமையற்று
பக்கம் அமர்ந்திருந்த
புகைவண்டியின்
ஓர் பதிவுசெய்யப்பட்ட படுக்கையை
சுமந்தபடி மெதுவாக!


பாதசாரியாய்
எதிர்திசை நோக்கி விரைய
வாகன வெளிச்சங்களில்
சப்தமிட்டு சிரித்தோடும்
நொடிமுட்களை உடைத்தெறிந்து
சேர்ந்த வாசலின்
திறக்கப்படாத கதவிற்குளிருப்பது
சொர்க்கமோ நரகமோ
தீர்மானிக்கலாம்
காலத்தின் கைகோர்த்து
மனதின் அறியாமை!


அறைமுழுதும் அதிரும்
வேற்றுமொழி சப்தங்களினிடையிலும்
திரைசீலை முழுதும்
நிரம்பி வழிகிறது
'அகர முதல எழுத்தெலாம்' !!!

எவ்வகை
இச்சையில் தொடங்கினாலும்
பயணத்தின் முடிவில்
நிலையாய் இருக்கிறது
ஓர் இருப்பு
என் அடையாளத்தோடு!

2 comments:

மஞ்சூர் ராசா said...

வித்தியாசமான முயற்சி.
வாழ்த்துக்கள்.

LakshmanaRaja said...

நன்றி நண்பரே. சில வெளிச்சங்கள் பாதையின் நிலை உணர்த்துவதோடு பயனத்தை தொடரவும் உதவுகிறது. நன்றி