Monday, November 26, 2007

இலக்கணத்தோடு பேசுகிறாய்


காத்திருப்பின் எல்லா
வலிகளையும் அர்த்தமற்று
செய்த ஓர் கட்டாயத்தின் வளைவில்
நீண்ட நாட்களுக்கு பிறகு
என் தனிமை உன்னோடு பயணிக்கிறது
தலைகுனிந்தபடி

விழி அவிழ்ந்த
அன்பின் வலிநிறம்பிய வார்த்தைகளை
ஓர் நோயின் அறிகுறியென விமர்சித்து ஒதுங்கி நின்று பின் சில உபாயங்கள் சொல்கிறாய்
பயனற்ற உன் மருந்துகளொடு வீடு திரும்புகையில் நோயாளியானேன் நான்


தன் பசிக்கு கேள்விக்குறிகளை தின்று
உடல் பெருத்த ஓர் முற்றுப்புள்ளியை மிக எளிதாக நீயிட
கேள்விகள் உருகுலைந்து வாக்கியங்கள் ஆனதும் இனி இதற்கெப்படி பதிலளிக்கவென இலக்கணம் பேசுகிறாய்
நீ எதுவும் பேசலாம்
பதிலளிக்க அன்பும் பதில்மறுக்க அறிவாளித்தனுமும் போதுமாயிற்றே

எல்லாம் செய்தும் உனை கருவாக்கி
சுமக்கிறது தாய்மையோடு என் கவிதை
உள்ளிருந்து உதைத்தளை பெருமிதத்தோடு
ஊருக்கு உரைத்தபடி.

நிராகரிப்பின் நொடிகள்


மற்றுமொரு கவிதை எழுதும் அவசர பொழுதில்
கைதவறி தொலைந்தது அந்த கவிதை

அறை முழுதும் மேசையின் கீழ்
என் முகம் காட்டும் கண்ணாடி
எங்கு தேடியும் கிடைக்கவில்லை

இயலாமையின் விளிம்பில் மௌனமானா
வேளையில் திசையறியாத காதுகளில்
இரகசியமாய் வந்து ஊடுறுவியது ஒரு கண்ணீரின் சப்தம்!
அது ஒரு நிராகரிப்பின் வலி என்றென் அனுபவம் நினைவுகூர்ந்தது!

சப்தத்தைபற்றி எவ்வித அக்கறையற்று
என் அன்புடை நண்பர்களைப்போல வாழ்த்தெரியாது
நான் தரை சாய்கிறேன்!

Sunday, November 25, 2007

பொம்மை


அவன் விளையாட
அவனே பொம்மை செய்துகொள்வான்

இந்த பொம்மையும் அந்த வகைதான்
செய்து முடித்து கண்கள் நுகர்கிறான்
அழகின் சில குறைகள் கண்டு உடைக்கிறான்!

மீண்டும் தொடங்குகிறது பொம்மை செய்தலெனும் வினை
இபோழுது மிக அழகாய் இருக்கிறது பொம்மை
எடுத்து ஆனந்தமாக விளையாடத்தொடங்கும் வேளையில்
பொம்மையின் கைகள் கண்கள் இதழ்களில் சில அசைவுகள் உணர்கிறான்
தவறு செய்து விட்டதாக பயம் கொண்டு அவசரமாக உடைக்கிறான்
மீண்டும் மண்ணாகிறது பொம்மை

தன் பிஞ்சு விரலால் மீண்டும்
பொம்மை செய்ய தொடங்கும் ஆண்டவன்
தெளிவாக இருக்கிறான்
அவன் செய்யும் பொம்மைகள்
அழகாக இருக்கவேண்டுமென்றும்
அதைவிட பொம்மையாகவும்!

Sunday, November 18, 2007

நவீன ஓவியங்கள் பார்வைக்கு மட்டுமே


வீட்டை சுத்தம் செய்தபொழுது
ஒரு நவீன ஓவியம் கண்டெடுத்தேன்!
பல வண்ணங்களினாலானது!

சில வண்ணங்கள் மிகவும் அடர்த்தியாய்
சில மிக அழகாய்
சிலவைகள் தூசி படிந்து
ஒவ்வொறு வண்ணமும்
என்னை எனக்கு காட்டிக்கொண்டு கண்ணாடியைப்போல !

என் கண்கள் எல்லாவற்றையுமே நோக்குகிறது
ஒரு கடவுளை பார்ப்பது போல தன்னை மூடிக்கொண்டு!
அதை அந்த வண்ணங்கள் அறிந்திருக்கவில்லை!

ஓவியத்தின் இடையில் சில கோடுகளால்
பார்வை தடுமாறியது!
எல்லைகளைப்போல!பண்பாட்டைப் போல.
யாரோ எதற்கோ உருவாக்கியது அந்த கோடுகள்!
அந்த யாரோ நானகவும் இருக்கலாம்!
சில வண்ணங்கள் உடல் ஊடுருவும்
கத்தியைப்போல பிற வண்ணங்களுக்குள்
தம்மை நீட்டிக்கொள்கிறது எல்லைக்கோடுகள் கடந்தும்!


இப்படி சில வீடுகளும் சில ஓவியங்களும்
நானும் இருக்கும் ஒரு பாதையை
வழிச்சுமையாய் கொண்டு தொடர்கிறேன் வேறொருபாதையில்!

கைதவறி கீழ்வைத்துவிட
சுமந்து வந்த பாதை
ஒரு வேகத்தடையாய் சுருங்கி
வழிவிட மறுக்கிறது இப்பொழுது!

அறிவாளியாய்
வேகத்தை குறைத்து
தாண்டிச்செல்ல மனம் ஏனோ தான் மறுக்கிறது!

கவனம் ஈர்த்தல்


பின்இருக்கையில் அமர்ந்திருந்தவன்
ஏதேதோ பாடல்களை வசனமாக பாடிக்கொண்டிந்தான்!
தமிழ் படித்ததாக அவ்வப்பொழுது சப்தமிட்டுக்கொண்டும்.சிரித்துக்கொண்டும்!

உடன் பயணித்தவர்கள்
அவன் பைத்தியம் என்று உணர்ந்திருக்கவேண்டும்.
அப்படித்தான் இருந்தது அவர்களின் பேச்சு அவனைப்பற்றி.

நான் எல்லொரையும் கவனித்துகொண்டிருந்தேன்.
நல்ல வேலை என்னை யாரும் கவனிக்கவில்லை.விமர்சிக்கவுமில்லை.

மௌனமாக இருப்பது ஒரு வகையில் நல்லதுதான்!
கவனிக்கப்படாமல் இருப்பதும்!

கவிதை


எல்லாம் போல அதுவும்
அப்படியே இருக்கட்டும்...
இருக்கும் நிலையில்!
தவறோ சரியோ
நான் அதை தவறாக
நினைக்காதவரை!
உங்கள் நினைப்பை பற்றிய
என் நினைப்பும் அது போலவே..

பிழைப்பு

உடைந்த முகம்
ஒன்று உடையாத கண்ணாடியில்!
ஒட்டி வைக்க முயற்சிக்கும்
விர‌ல்களுக்கு தட்டு படாமல் விரிசல்கள்!

உணரவில்லை கண்கள்
இரத்தம் சிந்திய கைகளை!
மிச்சமாய் வலி மட்டும்
இதயத்தில்!!

எவனோ சொன்னான்
அது நானாம்!
என்ன முட்டாள்தனம்!
ஏகத்தாளமாய் சிரித்தேன்!
உடன் சிரித்தது
அந்த கண்ணாடி பிம்பம்!!

Saturday, November 17, 2007

இரவு-நான்-பகல்


வன்மம் நிறைந்த
ஓர் மிருகத்தின் பதுங்கலென மெதுவாய்
என் இன்றைய பகலின்
உள் நுழைகிறது நேற்றைய இரவு!

தன் அசிங்கங்களை ஆடைக்குள் மறைத்து
அழகிய முகத்தோடு ஏக்கம் நிறம்ப
எனை பார்த்தது!

தன் நேரங்களை
நான் பகலுக்கு விற்றுவிட்டேனென்று
குற்றம் சாட்டுகிறது!

உண்மைதானென்று
உளம் சொல்ல விரல் நீட்டி
வாவென்றேன்!

எனக்கு பின்னிருந்த
பகல் உறுமியது இது
தன் குகை என்று!

இது இன்று மட்டுமல்ல்!
தினசரி வழக்கமாகிவிட்டது
இப்பொழுது!

இவை இரண்டுக்கும் இடையில்
எப்பொழுதும் நான்!

என் வாழ்கையை பலிபீடமாக்கி
அதன் முன் மண்டியிடுகிறேன்!

முதலில் வாளெடுத்து வெட்டுபவற்கு பீடம் பரிசு
என் உயிர் இலவச இணைப்பு!

வெட்டப்பட்ட என் உடலை
ஒட்டி வைத்து
உயிர் கொடுத்து மீண்டும்
தொடரலாம் இந்த விளையாட்டை
நாளையும் நேற்றை போல!

Thursday, November 15, 2007

மதிப்பெண் பட்டியல்


<குறிப்பு: இந்த கவிதை 7 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி நாட்களில் (3ம் ஆண்டு) தேர்வு முடிவின் மதிப்பெண் பட்டியல் பார்த்து எழுதியது..உங்கள் ரசனைக்காக... நினைவில் இருந்ததை பதிவிட்டிருக்கிறேன். சில வடமொழிசொற்கள் அப்போதைய என் அடையாளம்.அதனால் மாற்றவில்லை..>


அறையும் அலைகளுக்காய்
காத்திருக்கும் மணல் நான்!

ஆறுமாதங்களுக்கு ஒரு முறை
நிச்சயிக்கப்படுகிறது என் நிகழ்காலம்
நிச்சயமற்றுபோகிறது என் எதிர் காலம்!

புரிந்து கற்றல்,தியானம்,தவம்
இன்னபிற முயற்சிகள்
எதுவும் தேடிப்பார்த்தும் காணவில்லை
அந்த அச்சிட்ட காகிதத்தில்..

எவனோ எழுதியதையெல்லாம்
புரிந்துகொண்டவன் நான்..
நான் எழுதியதை
புரிந்துகொள்ளத்தான் யாரும் இல்லை!

எழுத்து என் பெண்டாட்டி..
கண்டிப்பாக செத்திருக்கவேண்டும்
மதிப்பெண்ணிட்டவன் தூரிகைப்படடதும்!
வெறும் சவத்தின் மதிப்பு
73% !!

சரஸ்வதியை வேசியாக்க
என் மனம் இடம் கொடுக்கவில்லை!!


----------இலக்குவண்-------------------
http://www.onthewaytoreachme.blogspot.com/

நம் அடையாளங்கள்


வாழ்க்கையின் சில கணங்களில் நாம் நம் அடையாளம் என சிலவற்றை நினைப்போம்.அதையே பின் ஒரு சூழலில் நாம் இல்லை என்று வாதாடுவோம்.காலம் 'நீ யார்' என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கும்.நாமும் அதனிடம் பதில் சொல்லிக்கொண்டே இருப்போம் மாற்றி மாற்றி முன்னுக்குப்பின் முரனாக. கடந்த காலத்து அடையாளங்கள் நிகழ் காலத்திற்கு பெரும்பாலும் பொறுந்துவதில்லை. எல்லாம் கடந்தும் அடி ஆழத்தில் நாம் நாமகவே இருப்பதான உணர்வும் நிலையாய் இருக்கும்.

"தவறு யாருடையது" என்ற என் கவிதையின் உள்ளர்த்தமும் அதுவே.
http://onthewaytoreachme.blogspot.com/2007/11/blog-post_14.html

Wednesday, November 14, 2007

தவறு யாருடையது




இன்னது என் பெயர்
கோயிலில் சந்தித்தோம்
உயரம் அதிகம்
வெண்ணிற உடை
சிறிய கண்கள்
சென்னைத்தமிழ்
இன்னும் சில…
"ஓ!நீங்களா!நலம்தானே!!"
அலைபேசியின் மறுமுனையிலிருந்து
நீண்ட மௌனத்திற்கு பின்
வழிந்த புதிய அன்பில்
அசௌகரியமுணர்ந்தது என் சுயம்!!

அறிந்து பின் மறந்த நண்பனாய்
மெல்லிய புன்னகையுடன
கேள்வி எழுப்பும் காலத்திற்கு
உண்மையான
என் அடையாளங்கள் நன்றாக தெரியும்!

நான் தான் என்னை தவறாக
அறிமுகபடுத்திவிட்டேன் போலும்!

Tuesday, November 13, 2007

புரிதலும் புரிதல் நிமித்தமும்



என் கவிதைகளை நான் அரங்கேற்றுவது குழுமங்களில் தான். எந்த குறை நிறை பற்றி விமர்சிப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

கவிதையின் மிக முக்கியமான தேவையாகிய
எழுத்து பிழையற்று மிக சரியாக எழுத முத்தமிழ் மற்றும் பிரவாகம் எனக்கு மிகுந்த உதவி செய்துள்ளது,முக்கியமாக மஞ்சூர் அண்ணா..


ஆனால் பொருட்பிழை பற்றிய விமர்சனங்கள் தான் என்னை பாதிப்பது,,


என்ன கருத்துக்காக எழுதபட்டதோ அதுவே தவறாக உணரபடுவது போல் மிக மோசமாக நான் கவிதை எழுதவில்லை என்பது என் அளவில் உண்மை..

என் கவிதைகள் ரசிப்பு தன்மையை விட உணர்வு தன்மை அதிகம் உள்ளவை..(பெரும்பாலும் வலி மிகுந்தவை)

படித்த முதல் தடவை இரண்டொரு நொடிகளில் புரியும் அளவு எழுதுவது ஒரு வகை..
எங்களுடையது மற்றொருவகை. இவை அர்த்தம் புரியும் வரை கடினமாக இருக்கும்.புரிந்து கொண்டால் சொல்லப்படும் கருத்து ரசிக்கப்படுவதை விட அனைவராலும் உணரப்படும்.

இதற்கு 1. பொறுமை தேவை 2. அனுபவம் தேவை 2. இது போன்ற எழுத்துக்களை வாசித்தல்..தமிழ்நதி,தமிழச்சி,மானுஷ்யபுத்திரன்..(நம் குழுமத்தில் கென்)...இன்னும் பலர்...இவர்களோடு என்னை ஒப்பிடவில்லை.. அவர்களின் கவிதைகளை போன்றது தான் என்னுடையதும்,,

உயிர்மையில் வரும் கவிதைகள் படிப்பவர்களுக்கு என் கவிதைகள் மிக சாதாரனமாக புரியும்.

சிறு வயதிலிருந்து இன்று வரை ரசிப்பு தன்மை யிலிருந்து விலகி உணர்வு தன்மைக்கு வந்துவிட்டேன்...இது என்னை பொறுத்தவரை முன்னேற்றமே...

எல்லோருக்கும் புரியும் கவிதையை தான் எழுதவேண்டும் என்றால் என்னால் இயலாது..

கலைபடங்களும் வியபாரரீதியான படங்களும் வெவ்வேறு வகை.இரண்டும் தவறல்ல..ஆனால் இரண்டும் படங்கள் என்பதை ஏற்க வேண்டும்.

மேல் சொன்ன வார்தைகள் எதுவும் தவறென்று கருதினால் சொல்லலாம்..அனுபவமின்மையால் இப்படி புரியாமல் கவிதை எழுதுவதாகவும் சொல்லலாம். .ஆனால் நான் ஏற்றுக்கொள்வது நேற்றைய என் அனுபவங்களையும் நாளைய என் அனுபவங்களையும் பொறுத்ததே!

நன்றி

Sunday, November 11, 2007

என் உலகத்தின் நான்கு சுவர்கள்!





எவ்வகை இச்சையோடும் பொழுதைபோக்க
யாராக இருந்தாலும் இந்த
திரையரங்கிற்குள் நுழையத்தகுதியாய்
அன்பான சில வார்த்தைகள் போதுமாதலால்
நெரிசல் அதிகமிருக்கும்!கவனம் தேவை!!

நிலையாய் இருப்பது கடினமான
கழிப்பறையில் கழிவை நீக்கி
புத்துணர்வோடு வெளியேறும் பொழுது
விட்டுச்செல்வது அசிங்கமானாலும்
அவையும் ஒரு வகை அடையாளமே!

தேவையறிந்து இன்னபிற உருவமேற்கும்
இந்த நான்கு சுவருக்குள்
விருப்பம் நிறைவேறியதும்
சொல்லியும் சொல்லாமலும் பிரியலாம் நீங்கள்!
வழிதவறி வந்ததாகவும்
நேரமின்மையென்றும்
காரணங்கள் அதுவாகவே பதிவாகிவிடும்!

என் அறைதான் என்றாலும்
விட்டுச்சென்ற எச்சங்களினிடையே
நான் மட்டும் மிச்சமாய் இருப்பது
வலிமிகுந்த இரவுகளை தவறாமல்
தந்துச்செல்கிறது உங்கள் நினைவாய்!

தனித்தே இருந்தாலும்
கண்ணினுள்ளேயே
தங்குகிறது ஒரு நீர்த்துளி
வெளியேறுவது தவறென்றறிந்து!

வாயிலில் தொங்கும்
'நன்றி.மீண்டும் வருக'
அர்த்தத்தோடும் அர்த்தமற்றும்!