Wednesday, December 26, 2007

உன் பதில் நோக்கிய பொழுதுகளில்


தொடரும் கருச்சிதைவுகள்
இடைநிறுத்தி
உன் நிமிடங்களின் அவசரத்தோடு
குருதி வாசம் மேலெழ
என் அன்பின் உணர்வுகள் பிரசவிக்கிறேன்

மனப்பிறழ்வின் பிதற்றலென
இரக்கத்தின் அமிலம் தெளித்து
மௌனமாய்
எழுந்து
விலகி
என் விழிதிசை நடக்கிறாய்
வெறும் அழகியல் வெளிப்பாடுகளோடு

பிணமான குழந்தைகளின்
விரல் நுனி காலிடற
உடல் கூசி உயிர் தகிக்கிறேன்
எதோ எல்லாம்
புதிதாய் நடப்பதாக.

Tuesday, December 18, 2007

புரிதலின் மௌனங்கள்


என்னை உணர்ந்தும்
சூழலால் மௌனித்திருப்பதன்
உன் நியாயங்கள்..
அனைத்தும் அறிந்தும்
நான் உன் வார்த்தைகளுக்காய் காத்திருப்பதிலும் இருக்கிறது


அவசரமாயும் அவசியமாயும்
என்ன இருக்கிறது
உடன் பகிர
பிரிவின் வெறுமையை தவிர!


கழுத்தில்
அலுவலக அடையாளங்கள்....
கனம் தாளாது
தொங்கும் தலையை
யாரும் அப்படித்தான் அறிவார்கள்…

தனைஉணர யாருமற்ற வீதியில்
நேர்கொண்டு பார்க்க ஏதுமில்லை


நம் புரிதலின் முன்
விலகி நின்று
விளக்கிச்சொல்ல
ஏதுமின்றி தவிக்கிறது
கவிதை

பனி மூடிய பாதையில் உறைகிறேன் நானும் ஒரு மரமாய்!


//குறிப்பு: என் தேவதையின் உணர்வை மொழிபெயர்த்திருக்கிறேன்//



பனிமூட
உயிர் உறையும்
நாட்களில் சவமாகி
அசைவற்ற மரமாகிறேன்!


பனி நீக்கி
உயிர் காத்திடும் காற்று
என் இலை உதிர்த்து
தன் வழிநோக்கி பயனிக்க
இனி ஒட்டயியலாது
என் வசந்தத்தின் சாட்சிகள்
விழிநீரில் மிதக்கிறது
உயிர்பெற்ற எனை பார்த்து
இருத்தலின்
கேள்விகள் எழுப்பியடி!



இலைஉதிர்ந்த
கனுக்கலின் வலியுணர்ந்த
சிறு பனிமேடுகளால்
யாரோ மருந்திட
காயங்கள் அழகாக
அழகானது மரம்

தன் கதிரின் வெம்மை தாளாது பனிவிலக
அந்த சூரியன் எதிர் பட்டவர்களிடம் வருத்தம் பகிர்ந்து
மேற்கு நோக்கி பயனிக்கிறது
தான் மரத்தின் அழகை ரசிக்கவே விரும்பியதாக!
இயல்புகளுக்கும் இயற்கைக்கும்
உள்ள தூரத்தில்
வாழ்கிறேன்
நான்
சில நேரங்களில் சூரியனாகவும்
ல நேரங்களில் சூரியனோடும்!


இறந்தகாலத்தின் வசந்தம்
நிகழ்காலத்தின் பனியும்
எதிர் காலத்திலும் உண்டென
அறிந்த மரத்திற்கு
தெரியும்
‘எல்லாம் கடந்து போகும்’ என்பது!

Monday, December 10, 2007

தனிமையின் தழல்


எரியும் சிதை ஒன்று
உடல் இறுகி எழ
அடித்து அடக்க தடியுடன் பக்கம் நிற்கிறான் ஒருவன்

தீமூட்டிய கரங்களும்
உடனிருந்து வழிகாட்டிய கூட்டமும்
கலைய தொடங்கியது

அவன் உயிரோடிருப்பதாக
நான் மட்டும் உரத்த குரலோடு
உண்மையை எழுப்புகிறேன்

இறந்தவன் பேசுவதான பயத்தோடு
கவனித்தும் திரும்ப மறுத்து
சலனமற்று வந்த வழி தொடரும் கூட்டத்தில்
தன் அடையாளம் மறைக்கும்
முயற்சியில் வளைகள் அவிழ்ந்து கீழ்விழ
நடையிடுகின்றது எரிமூட்டிய கரங்கள் !

தடியை உயர்த்தி காத்திருப்பவனுக்கு
பயம் ஏதுமில்லை என்பதில் எந்த
ஆச்சரியமும் இல்லை.

Tuesday, December 4, 2007

என் தேவதைக்காக


அச்சேறிய என் கவிதைக்குள்ளும்
துவ்வலின் நடுக்கங்கள் அறிகிறாய்
அதன் வார்த்தைகளில்
தனித்திருக்கும் கண்ணீரின் வலி அறிந்து
உள் நுழைந்து உயிர் வருடுகிறாய்!

என் தவங்களுக்கு
வரம் தர கடவுள் வரா
விடியலின் திசைநோக்கி விழிக்கும் நொடியில்
தேவதையாகி பக்கமர்ந்திருந்தாய்!
என் தவம் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்
நீ சுமந்த வரங்கள் தேவையில்லை
உன் அருகாமை போதுமென்று!

உன்னை பார்த்ததும் அதிகரிக்கும்
என் கண்ணீரை இன்றுவரை
நீ துடைத்ததில்லை!
ஆழமான உன் பார்வையில்
அது தானே அமைதியுறும் அர்த்தமுற்றதாய்!

என் உயிர் என சிலர் இருக்கிறார்கள்!
என் உயிர்
அதுவாக இருப்பதற்கான
காரணமாகவும் ஒரே சாட்சியாகவும் நீ மட்டும்!

Monday, December 3, 2007

நானும் அந்த மேடையில்!


நாடகம் பார்க்க வந்தவன்
வழி தவறி ஒப்பனை அறைக்குள் நுழைந்தேன்
சிறுவன் வாலிபன் முதியோன் என
ஒரு மன்னன் மூவராகி பக்கம் அமர்ந்து
ஏதோ கதைத்துக்கொண்டிருந்தனர்
‘நல்ல வேலையாக வந்துவிட்டீர்கள் ஒப்பனை இட்டு கொள்ளவும்’
உள் அழைத்தவள் தலைமுடி கலைந்திருந்தது கண்ணகி போல
நான் நடிகன் என அறிந்து
என்ன வேடம் எனத்தெரியாத பதற்றத்தோடு
ஒப்பனையிருக்கையில் அமர
“முதலில் முகம் அலம்பிவா“வெனச்சொன்னான் ஒருவன் ஏளனமாக
ஏனென்ற கேள்வியோடு நான் என் முகம் தீண்ட
விரல் நுனியில் பல வண்ணங்கள்
பழைய வேடத்தினுடையதென்ற அந்த ஒருவன் ஆண்டவனென அறிய முடியவில்லை எனக்கு!
அதிர்ந்து நின்ற எனை பார்த்து சப்தமிட்டது ஒரு கூட்டம்
ஒப்பனை அறைதான் மேடை என்று அப்பொழுதும் எனக்கு தெளிவாக தெரியவில்லை.