Sunday, September 30, 2007

நினைவின் அர்த்தங்கள்


சிறு வயது முதலே எனக்குள் ஒரு விருப்பம் உண்டு.வாழ்க்கையை முழுவதுமாய் உணர்ந்து வாழவேண்டும் என்பதே அது. இதை எப்படியோ வாழ்க்கை அறிந்திருக்கிறது .தன்னை உணர நினைப்பதாலேயே என்னை மிகவும் விரும்பி என் ஆசைக்கு துணையாய் வாழ்தலை கற்று தர முனைந்தது. ஆனால் நானோ வாழ்க்கை தன்னை உணர்த்தும் ஒவ்வொரு பொழுதிலும் சிறு கோபம் கொண்டு சிறு தொல்லைகளால் அதன் உணர்வுகளை நிராகரித்திருக்கிறேன். தான், அன்பை எதிர்நோக்கும் ஒருவரிடமிருந்து வரும் நிராகரித்தலின் வலி தாளாமல் ஒரு முடிவிற்கு வந்ததாய் என் அன்புக்கினியவர்களை தேடி அவர்கள் வழியாக தன்னை உணர்த்த முடிவுசெய்தது.ஆனால் நானோ அதன் நாடகத்தை அறிந்தவனாய் எப்பொழுதும்போல் அதன் மேல் கோபம் கொண்டேன். தன் முயற்சி தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் இன்னும் அதிகமான அன்போடும் அக்கறையோடும் என்னை தேடி ஏதோ ஒரு பாசத்திற்குறிய முகத்தின் வழியே வந்து கொண்டுதான் இருக்கிறது,தன் முயற்சியின் உள்நோக்கத்தை, உள்ளன்பை உணராமல் கோபம் கொள்ளும் என்னை தொடர்ந்தபடி.பாவம் அதன் நிலைமை பரிதாபத்திற்குறியதாகவே உணர்கிறேன்.


ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்..என்னைப்போல் தான் (என்) வாழ்க்கையும்..:-)

Thursday, September 27, 2007

கனவின் அர்த்தங்கள்..





"வயல் வெளியில் சிறு பறவை
விதைக்கிறதே பல கனவை!"



எழுதியவன் என்னை அறிந்திருந்தால் வார்த்தைகள் அர்த்தபடுத்த ஒருவன் இருப்பதை கண்டு வியந்திருப்பான். இது கர்வம் அல்ல. நான். அவ்வளவே. என் பார்வையின் எல்லா திசைகளிலும் கனவுகளை விதைத்துகொண்டே இருக்கிறேன். (ஒரு விதைப்பின் இடைவெளியில் கவனிக்கபடாமல் மற்றுமொரு விதையின் வாடுதல் நிகழ்ந்துவிடுவதை தடுக்க இயலவில்லை தான். :-(. இருந்தும் தொடர்கிறேன்). இதோ திங்கள் அன்று தமிழ் இலக்கியம் பயிலும் என் ஆசையை விதைத்திருக்கிறேன். பள்ளியில் படித்த காலத்திலே ஒரு காதலின் தேவையால் கவிதை எழுதுவதும் தமிழ் மீது அதிக ஈடுபாடும் ஏற்பட்டதை பற்றி நினைத்து பார்க்கிறேன். :-).
என் கவிதை மேல் எனக்கு ஒரு அதீத மரியாதை உண்டு. அதனாலேயே . என் கவிதை தோற்றால் என்னால் ஏற்க இயலாது.:-). ஒரு குடியரசு தின விழாவில் நடந்த கவிதை போட்டியில் தோற்று விட கூடாதென பெயர் அளிக்காதிருந்த என்னை, நண்பர்கள் கட்டாய படுத்தி மேடை ஏற்றினர். மாவட்ட அளவில் நடந்த அந்த போட்டியில் முதலாவதாக வந்ததும் என் இல்லத்தில் அதை சொல்ல யாரும் நம்ப மறுத்ததையும் என் வாழ்வின் மிகுந்த மகிழ்ச்சி நிரம்பிய தருணங்களாக உணர்கிறேன். அப்பொழுது கூட கிளிப்பிள்ளை போல் உன் ஆசை என்ன என்றால் 'பொறியாளர்' என்றே சொல்லிவந்தேன். பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பாட திட்டம் பார்த்து அதில் 'தமிழ்' ஏன் இல்லை என்று யாரிடம் கேட்க என்று தெரியாமல் விழித்தேன். என்னை போல் யாரும் விழித்திருக்கலாம். ஆனால் அடையாளம் தெரியவில்லை இன்று வரை. இருந்தும் அப்பொழுதும் காதல் கடிதம் எழுதவும் கவிதைகள் எழுதவும் எனக்கு தெரிந்த தமிழே போதுமானதாக இருந்தது.:-))). என் மீது தமிழுக்கும் தமிழ் மேல் எனக்கும் காதல் எனக்கே தெரியாமல் இருந்துவந்ததை நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை.. அந்த நாட்களில் தான் காதலுக்காக மட்டும் அபத்தமாய்(!) எழுதிக்கொண்டிருந்த என் விரல்கள் என் வலிகளுக்கும் கவிதை எழுத முயன்றது. தன்மானங்களை அழிக்கும் திறம் கொண்ட என் கண்ணீர் துளிகளால் கூட என் கவிதையின் வார்த்தைகளை அழிக்க முடிந்ததில்லை. தேர்வின் முடிவு தந்த வருத்தத்தை பதிவு செய்ய முயன்று சர்ச்சைக்கு உள்ளான ஒரு கவிதையும் உண்டு.(தேடிகொண்டிருக்கிறேன்.கிடைத்ததும் இங்கு பதிவிடுகிறேன்). கல்லூரி முடிந்து வேலையற்ற நாட்களிலும் விரிவுரையாளராக பணியாற்றிய நாட்களிலும் கவிதையும் தமிழும் சற்றே ஒதுங்கி நின்றது.இதோ இப்பொழுது இந்த அலுவலக வாழ்க்கையில் கவிதைக்கென்று இடம் அதிகம் ஒதுக்கவில்லை என்றாலும் எனக்கும்
என் தேவதைக்குமான

கடித பரிமாற்றமே கவித்துவமும் வலியும் நிரம்பியவை. அவ்வழியில் தமிழ் என்னுள் ஒரு மிக பெரிய தாகத்தையும் தவிப்பையும் ஏற்படுத்தின.என் வாழ்வியலில் தமிழுக்கென்று தனி இடம் வேண்டும் என்ற உணர்வு மேலிட்டது. வலைப்பதிவுகளில் அறிமுகமாகி 2 ஆண்டுகள் ஆகியும் தமிழ்மணம் அறிமுகமான இந்த இரண்டு மாதங்களில் தான் நிறைய தமிழ் இலக்கியவாதிகளின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.என்னை அடையாளப்படுத்தும் ஆவல் அதிகரித்தது. உணர்வுகளை உருக்கி வார்த்தைகளாக்கும், மானசீக குருவாக நான் ஏற்றுக்கொண்ட தமிழ்நதி, நான் புதிதாக சேர்ந்த வகுப்பில் ஏற்கனவே முதல் மாணவியாக சிறந்து விளங்கும் காயத்திரி ,என் கவிதைகளில் நான் செய்ய விரும்பாத தொடர்ந்து நிகழ்த்தும் எழுத்துப்பிழைகளை பொறுமையுடன் சொல்லும் மஞ்சூர் ராசா

என எண்ணிக்கையில் மிக சிறிய ஆனாலும் அர்த்தம் மிகுந்த என் வலையுளக நண்பர்களிடம் இந்த பதிவின் மூலம் வாழ்த்துதல் பெற விழைகிறேன்.


பி.கு :
நான் இன்று தமிழை என் உணர்வு சார்ந்த ஓர் உயிராக பார்க்கிறேன். என்னை உலகில் மதிக்கும் மற்றுமோரு ஆன்மாவாகவும்.மேலும் கல்வி மனிதனை உருவாக்கும் என்பதை நான் ஏற்பதில்லை.வாழ்வியலில் நம் தேவைகளுக்கு அதுவும் ஒரு கருவி / ஒரு வழி அவ்வளவே. இலக்கியம் பயில்வதன் மூலம் என் எண்ணங்களை ,உணர்வுகளை மேலும் தெளிவாக பதிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் சங்க இலக்கியங்களுக்குறிய அழகின் இரகசியம் அறியும் முயற்சியுமே இது,...




Tuesday, September 25, 2007

நட்பின் அடையாளங்கள்!


பார்வையை கண்ணில்
வைத்து வெளிச்சத்தை
வெளியே தேடச்சொல்லும்
வாழ்வியலின்
முட்டள்தனத்தில்
பார்வையை இழக்கும்
அபாயம் நிறைந்தவை
வெளிச்சம் தேடும் முயற்சிகள் !

முகமூடிகள் அணிய
மறுக்கும் என் போன்ற
அறிவாளிகளுக்கு
பொது இடங்களில்
நிர்வாணம் தடை செய்யப்பட்டுள்ள
இந்த சமூகத்தில்
மிச்சமிருப்பவை
ஆற்றாமையும்
சில ஆறுதலும்
கேவலமான புன்சிரிப்பும்!

பாதுகாப்பற்ற உண்மை பொய்தேடி
ஒளிவதையொத்து நிகழ்கிறது
சுயத்தை இழந்தேனும்
உன்னை சேரும்
என் பயணங்கள்!
பயமுறுத்தும் பார்வையோடு தனிமை!

குறைந்தபட்ச மனிதத்தன்மை
கூட இல்லாமல் நடந்துகொள்ளும்
என் ஆருயிர் நண்பனுக்கு
எப்படி புரியவைப்பேன்
இன்றும்கூட பார்த்தவுடன்
யாரோவென முகம்
திருப்பிகொள்ள இயலாத
என் இருப்பை!

Saturday, September 22, 2007

நானும் அவனும்


நன்கறிவேன் நான்
அவனை!

வல்லினம் கூட மெல்லினமாக தன்னை
உணரும் அவன் வார்த்தைகளில்!

தன் வீட்டிலும் -
நன்பர்கள் வீட்டிலும்
அவன் தான் நல்லப்பிள்ளை.

எப்பொழுதும் மழையீரம்
நிரம்பிய அவன் முகத்தில்
முகமூடிகள் பிரித்தறிவது கடினம்!

நிரம்பிய அனுபவசாலி!
வலியுடன் வரும் எல்லோரையும்
சில நொடிகளில்
மகிழச்செய்பவன்!

பிறர் சுயம் மதிப்பதை
தன் சுயம் என வாழ்பவன்

அவனுக்கு கவிதை எழுத
தெரியாதென என்னை கர்வம் கொள்ள
செய்பவன்!

ஓர் உடலில்
இருதுருவங்களென நாம்
வாழ்கிறோம் என்று நான் கூறுகையில்
மிக அழகாக புன்னகைப்பவன்!

ஓர் சுயத்தின்
நிரூபித்தலுக்கு இலக்காகி
சற்றுமுன் கொலையின்
குரூரத்தோடு முகம் அறைந்து
வீழ்ந்த உணர்வுகள் நிரம்பிய
என் கவிதைகளில்
வழியும் குருதியின் வாசத்தால்
வெறிகொண்ட வன்மதோடு
எழுத முனைந்த என் துவ்வலை
தடுத்தாண்டு
காற்றுக்கசையும் புல்வெளியின்
மகத்துவத்தை பற்றி கவிதை எழுத அழைக்கின்றான்..

தன்னை மதிப்பவரை
மதிக்க வேண்டும் என்று
ஓர் விண்ணப்பத்தை
வைத்து செல்கிறது
காலம்!

இலக்குமண ராசா

Friday, September 21, 2007

இனியேனும் நிறுத்துகின்றேன் உனக்கென கவிதை எழுதுவதையாவது!


கவிதைகள் உணர்த்தியதா
தெரியாது!
மீண்டும் மீண்டும்
வலிகள் உணர்த்துகின்றன
உன் மீதான
என் அன்பின் ஆழத்தை!

நீ விட்டு சென்ற
முட்களை நினைவுச்சின்னமென
சேகரிக்கின்றேன்
கவனிக்கப்படாமல்
என்னை போல் வீழ்கிறது
விரல் நுனி ரத்தம்
அதே பாதையில்......

உன் கவிதைக்கு
மற்றுமொரு
'அசைச்சொல்'லென
அர்த்தமற்று
தொக்கிநிற்க மறுக்கிறது
என் சுயம்...

கண்ணீரோடும் சப்தத்தோடும்
காலத்தின்(காலமின்மையின்!) கைகளில்
இழுத்து செல்லப்படும்
ஓர் குழந்தையின்
கைவிரல் நீட்டிய
எதிர் திசையில்
சிரிக்கிறது
அழகான பொம்மை ஒன்று
அமைதியாய்..

Thursday, September 13, 2007

மௌனம் சார்ந்த நிலங்களில்




என் கவிதைக்குள்
வர மறுக்கின்றன்
உன் மௌனத்தோடு
வைத்திழந்த
என் வார்த்தைகள்
ஒரு தோல்வியின் தாளாமையோடு

அன்றைய மழையை
உன் வரவை
இன்றைய வெயிலை
நிரப்பிபோகிறது காலம்
ஒரு பாதசுவடுக்குள்!
அந்த சுவடின் ஓரத்தில்
நிலையாய்
நிற்கும் ஒரு பார்வையில்
கொடிய வெயில் ஒன்று
மழையாய் உருகும்
அபத்தம் நிகழ்கிறது!


முகம் மூடி சுயம்
மறைக்கும் உன் விரல்களினூடே
வழியும் கண்ணீர் துளிகளை
கவிதை என அடிக்கோடிடும்
உன் முயற்சிகளில்
சிறு சாட்டைக்கு பயந்து
கோயில் வாசல் யானையொத்து
தன் சுயம் மறந்து
எல்லைக்குள்
நிற்கிறது
மொனமாய் ஓர் அன்பு..

அன்பை எதிர் நோக்கும்
கேள்விகளுக்கு
தேர்வின் அக்கறையோடு நீ
தரும் வெறுமை நிரம்பிய பதில்கள்
எனக்குள் நினைவுபடுத்துகிறது
சில கவிதைகளையும்
இயலாமைகளையும்...

இதை கவிதையென்றும்
நான் கவிஞன் என்றும் நீ
கூறி செல்லலாம்..
காலம் எதைதான்
நிகழ்த்தவில்லை..

Sunday, September 2, 2007

நட்பு


அழகு படுத்த
அக்கறையோடு பராமறிக்க
அசௌகரியத்தின் பொழுது வெட்டிவிட
மிக எளியதாகவே இருக்கின்றது
என் விரல்களில்
சில நகங்கள்!


வெட்டும் எந்த பொழுதிலும்
நினைவில் நிற்பதில்லை
நானும் ஒரு நகமென
வெட்டப்பட்ட பொழுதில்
உணர்ந்த வலிகள் எதுவும்!

இன்று இரவு துயர்மிகு கவிதை ஒன்றை நான் எழுதலாம்


கொலை ஒன்று நிகழும்
பயத்தோடு காத்திருகின்றன நாம்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகள்!
முறைத்து கொண்டிருகிறது அன்று
நீ இருந்த அதே இருக்கையிலிருந்து
ஒரு முற்றுப்புள்ளி
இரக்கமற்று!

உன் பதில்களற்ற என் மடல்களில்
காத்திருக்கிறது
காதல் காமம் நட்பு இரத்த அடையாளங்கள்
ஏதுமற்ற 'யாரோ' வின் அன்பு
கவனிப்பாரற்று!

இரவின் இரகசியங்களை
தன்னுட்படுத்தி
சிறு அலைகளினூடே நிலையாய்
நகரும் ஆற்றின் மௌனத்தோடு
கடந்து செல்கிறாய்
உன் திசை நோக்கிய பாதையின்
நீளத்தோடு என் நிழல் பரப்பி
காத்திருக்கிறேன்!

பாம்பை கண்ணுற்ற
அனிலின் சப்தமென
தொடர்கிறது
'இறுக சாத்தப்பட்ட கதவொன்று'