Tuesday, October 30, 2007

என் கவிதைகள்


சற்று முன் பிறந்த
உலக வெளிச்ச சப்தமறியாத
சிறு குழந்தையின் அழுகுரல் கூறும்
உண்மையான அர்த்தத்தை
அன்புடை நண்பர்களும்
வழிபோக்கர்களும் புரிந்துகொள்வதேயில்லை!

தன்னை
உணர்வதற்கென்றே உயிர் வாழும்
அன்னை அருகிருக்கும் வரை
அது தன் அழுகையை தொடரலாம்
எவ்வித கவலையுமின்றி!

Sunday, October 28, 2007

நான்!




பசித்த வயிற்றோரம்
சோற்றுப்பானையின் நிர்வாணம் மறைக்கும்
ஈரத்துணியின் தற்காலிக தீர்வாய்
மழை வந்து போகும்
வெயில் நிரம்பிய பாதையில்
கண்கள் பனிக்க
கூற்றெனும் ஆற்றோடு
கடலொன்று பயணிக்கிறது
யாரும் அறியாதவரை
அதுவும்
ஒரு ஓடம் தான்!

Tuesday, October 16, 2007

:-)


உன்னை நித்தம்
பின் தொடரும்
குழந்தையாய் நான்!
என்னை
எப்பொழுதுமே
பொம்மையாக்கி
தொலைத்தழும்
மற்றுமொரு
குழந்தையாய் நீ!

Saturday, October 13, 2007

என் செய்ய?!








மகிழ்ந்துயிர்த்த இறந்த காலங்களை
குருதி படிந்த முட்தடங்களை
தெய்வீகம் உணர்ந்த நாட்களை
கனவென தகர்த்தெறியபட்ட
சில நினைவுகளை
உண்மையின் நிழலென
ஓர் சுயசரிதையை
கடிதத்தில் எதை எழுதுவது
தேவையற்றதாய் உணர்ந்தும் தொடர்கிறது
தற்கொலையின் முந்தைய இரவிலும்
தன்னை அடையாளப்படுத்தும்
அவன் முயற்சிகள்!

வெற்றுகாகிதத்தோடு நானும்
காத்திருக்கின்றேன் (தேவையற்றதெனினும்!)
என்னை மௌனித்திருக்கச் சொல்லிய
உன் வார்த்தைகளின் வலிகளை
கவிதையாக மொழிபெயற்க!

Saturday, October 6, 2007

தொழில் தர்மங்கள்!!


யன்னல் திறக்க தடை செய்யும்
குளிரூட்டப்பட்ட அறையின்
நான்கு சுவருக்குள்
பகுத்தறிவது கடினம்
காலை மாலை இரவுகளை!

உள்ளிருக்கும் எந்த பொழுதிலும்
செய்தலாகாது
பசி தூக்கம் பற்றிய
நினைத்தலெனும் தவறுகளை!

இகழ்ச்சியின் எல்லா சப்தங்களின்
இடையிலும் நழுவாது
இருக்கிறது உதட்டோரம்
ஒரு புன்னகை!


பொருட்படுத்த நேரமற்ற
உடலுறுப்புகளின்
வலி அனைத்தும்
ஒரு வகையில்
தொழில் இரகசியங்கள்!

மாறும் மருந்துகளிலும்
மருத்துவன் கையெழுத்து கிறுக்கல்களிலும்
அழிகிறது இளமையின் வண்ணம்!


மேல் சொன்ன அனைத்தையும்
பொருட்படுத்தாது
பல்லிளிக்கிறது மனம்
பணப்பை கனக்கையில்!

எந்த வகையில் நோக்கினாலும்
எனக்கும் வேசிக்கும்
பெரிய வித்தியாசம் இல்லை!

நிலையானது வாழ்வு!!!..


சில நிமிடங்களிலோ சில மணித்துளியிலோ சில நாட்களிலோ சில மாதங்களிலோ சில வருடம் கழித்தோ கூட நடக்கலாம் மீண்டும் மீண்டும் அந்த புரிதல்... ஒவ்வொருவர் வாழ்கைக்கும் நிலையானதோர் சுவை உளதென்றும், அது எல்லா அனுபவம் கடந்தும் நிகழ்வுகள் கடந்தும் ஒரே மாதிரி தான் உளதென்றும்..

Tuesday, October 2, 2007

பானையின் ஒரு பருக்கை



நெரிசலற்ற
இரவு நேர வீதியில்
காலைப்பொழுதின் இயலாமையை
துடைத்தெறிய விரைந்து
கடக்கும் மாநகர பேருந்தில்
இச்சையை கைபற்றும் வேகத்தோடு
உயிரை தவறவிட்டேறும்
நொடிபொழுதில்
கடவுளாகி மீண்டும்
அதுவானது ஓர் படிக்கம்பி!


வழித்தவற முற்பட்ட கணத்தில்
சற்றுமுன் உலகம் சமைத்த
யன்னலோர இருக்கை தேவையற்றுபோக
வெளியிறங்கிய எனை
சேருமிடம் சேர்த்து
இன்னும் தொடர்கிறது
அந்த சிற்றுந்து
பொறுமையற்று
பக்கம் அமர்ந்திருந்த
புகைவண்டியின்
ஓர் பதிவுசெய்யப்பட்ட படுக்கையை
சுமந்தபடி மெதுவாக!


பாதசாரியாய்
எதிர்திசை நோக்கி விரைய
வாகன வெளிச்சங்களில்
சப்தமிட்டு சிரித்தோடும்
நொடிமுட்களை உடைத்தெறிந்து
சேர்ந்த வாசலின்
திறக்கப்படாத கதவிற்குளிருப்பது
சொர்க்கமோ நரகமோ
தீர்மானிக்கலாம்
காலத்தின் கைகோர்த்து
மனதின் அறியாமை!


அறைமுழுதும் அதிரும்
வேற்றுமொழி சப்தங்களினிடையிலும்
திரைசீலை முழுதும்
நிரம்பி வழிகிறது
'அகர முதல எழுத்தெலாம்' !!!

எவ்வகை
இச்சையில் தொடங்கினாலும்
பயணத்தின் முடிவில்
நிலையாய் இருக்கிறது
ஓர் இருப்பு
என் அடையாளத்தோடு!