Wednesday, January 2, 2008

புத்தாண்டின் அசௌகரியங்கள்


வாழ்வின் நடைபழகுதலில்
பார்வை உணராத பள்ளங்களுள்
என் நம்பிக்கைகள் வீழ
சூழலின் முட்களால் கிழிக்கப்பட்டு
திசையெங்கும் சிதறின
முகமூடிகளின் மிச்சங்கள்!

இந்த வன்முறையின் எச்சமென
நகக்கீறல்களின் அடையாளங்களுடன்
காயப்பட்ட முகத்தின்
இறந்த காலத்தழும்புகளில்
மீண்டும் கசியத் தொடங்கிய
கண்ணீர்த் துளிகளை
உண்டு உயிர்த்தன சில வார்த்தைகள்!

புத்தாண்டின் நீட்சியென
புதிய நாட்குறிப்பின் சுகந்தம்
அசௌகரியப்படுத்த,
எழுதப்படவேண்டிய கவிதை ஒன்று
தன்னை விதைக்கவும் இயலாமல்
மறைக்கவும் வழியறியாது
என்னைப் போல்
நடுநிசியின் வீதிகளில்
தனைக்கண்டு குரைக்கும் நாய்களுடன்
உளம் பழக முயற்சிக்கிறது
குறைந்தபட்சம்
தனித்து அலைதலைத் தவிர்க்கவேனும்!

1 comment:

காஞ்சனை said...

//எழுதப்படவேண்டிய கவிதை ஒன்று
தன்னை விதைக்கவும் இயலாமல்
மறைக்கவும் வழியறியாது//

உணர்வுகளை வார்த்தையால் வடிக்க இயலாமல் பலமுறை தவித்திருக்கிறேன்.
அந்த உணர்வு இங்கே வார்த்தைகளில் கவிவடிவம் கொண்டுள்ளது.

ஆழமான வலியின் உணர்வு, ஒரு அழகான கவிதைக்கு வித்து. :-)

- சகாரா.