Sunday, January 6, 2008

புதிய நட்பும் வழமையான திருஓடும்




தன்னைக் கடந்து செல்லும்
பெயர் தெரியாத பறவையின்
நிராகரிப்பில்
முறிந்து விழுகிறது
கூடுகளற்ற ஒரு கிளை

கோபம் கொள்ளும் உரிமை
இதுவரை விதைக்கப்படவில்லை
என்பதும் உண்மையே

விழி தேங்கும் கடலை
எனதல்ல எனப் பிதற்றுகிறேன்
கறைமீறி கசியும்
உப்பு நீரில் சவமாகிப் பத்திரப்படுகிறது
ஓர் அன்பு

கால்குறுகி அமர்ந்தபடி
கொலை நிகழ்ந்த அதே இடத்தில்
எந்த பிரக்ஞையுமற்று
நட்சத்திரங்கள் பற்றி கவிதை எழுதிக் கொண்டிருப்பாய்
நட்பு
குருதியின் கறையென
மிஞ்சும் சேலையைப்பற்றிய
கவலையோடும்

உதவியென
வாசல் நிற்கையில்
இனியும் தாமதிக்காது
பரிசளித்து விடு
எனக்கென பத்திரப்படுத்திய
அந்த திருஓட்டை

1 comment:

காயத்ரி சித்தார்த் said...

//கால்குறுகி அமர்ந்தபடி
கொலை நிகழ்ந்த அதே இடத்தில்
எந்த பிரக்ஞையுமற்று
நட்சத்திரங்கள் பற்றி கவிதை எழுதிக் கொண்டிருப்பாய்
//

இதைப் படித்ததும் நிறைய நினைவுகள் அலைமோதுகிறது மனதில்.. கவிதை நன்றாகயிருக்கிறது லக்ஷ்மண்.