Sunday, January 13, 2008

பாலையின் சுவடுகள் என் மனதில்





அன்புள்ள தேவதைக்கு,

உன் பிரிவின் வலியை கூற விழைந்து எங்கேனும் உன்னை கொலை செய்யும் முயற்சி ஆகிடுமோ என்ற பயத்தோடு இப்படி மௌனம் காக்கிறேன்..

உன்னை பற்றி மட்டுமே நினைத்து கொண்டிருப்பதில்லை. இருந்தும் என்னொடு ஏதோ ஒரு வழியில் உன் பிரிவு வந்துகொண்டுதான் இருக்கிறது.

சற்றே கண்ணுறும் பொழுது ஒரு மௌனமான வலி ஒன்று வெயில் நுழையும் இருள் போல உயிர் நுழைந்து கிழிக்கிறது என் இருப்பை.

கழுத்தில், கன்னத்தில் ,இதயத்தின் ஓரத்தில் ,கால்களில், இறுகும் நெற்றியில் எல்லாமும் நிகழ்கிறது ஒரு வலியின் கண்ணீருக்குறிய தேடல்.

உன் இறுதி வார்த்தைகளும் இந்த நீண்ட மௌனமும் மனதில் எதிரொலியென மீண்டும் மீண்டும் வருகிறது. அதிர்வுகள் நிற்காமல்.

வாழ்கை உனக்கும் எனக்கும் அனைத்தையும் கற்று தந்துகொண்டே இருக்கிறது.அதனால் என் விளக்கம் எதுவும் உனக்கும் உன் விளக்கம் எனக்கும் தேவையில்லை என்று இருவருக்கும் தெரியும்.
இருப்பினும் பல நேரங்களில் எனக்கும் சில நேரங்களில் உனக்கும் ஒரு ஆறுதல் தேவைபடுவது நம் உறவின் இருப்பும் அதன் தேவையுமாய் உணர்கிறேன்.

'நாம் ஆண்டவனின், அவன் வழியில், மிகவும் நேசிக்கபடும் குழந்தைகள்..நாமும் அவனை நேசித்துகொண்டே இருப்போம் நம் வழியில்'

வார்த்தைகளும் அதற்கான அர்த்தங்களும் அனுபவம்தானே தீர்மானிக்கின்றன. நிறைய எழுதவேண்டும்..அதிகம் பேசவேண்டும்..

அந்த பார்வை.சிறு புன்னகை.இறுதியாக எப்பொழுது..தெரியவில்லை...ஏதோ ஒரு விபத்தில்... இனி எப்பொழுது...விபத்தோ..வினையோ..விதியோ...

ஒன்றுமட்டும் நிச்சயம். இந்த மடல் முழுதும் உனக்கு தெரியாத எதையும் பதிவு செய்யவில்லை என்றே தோன்றுகிறதே எப்பொழுதும் போல்.

No comments: