Friday, February 15, 2008

கவனிக்க!

இனி என் எல்லா புதியப்பதிவுகளும்
www.iruppu.blogspot.com
இல் வெளியாகும் என்பதைத்தெரிவித்துக்கொள்கிறேன்

Tuesday, February 12, 2008

வெளிச்சம்

பிரபஞ்சத்தின் இருள்
துகள்களுக்குள்
நான் கரைய மிச்சமாய்
உயிர்த்துக் கிடந்த விரல்கள் தீண்டின
ஒரு் தாவணிப்பெண்ணின்
இடையையும்
பறக்கத் துடித்த
ஒரு பட்டாம் பூச்சியின் சிறகையும்

மீண்ட வெளிச்சத்தின்
அசௌகரியத்தில்
அவைகள்
உயிரிழந்து உருமாறின
யாரோ விட்டுச்சென்ற
கைக்குட்டையாகவும்
என்னுடைய பழைய கவிதையாகவும்

கைகால் முளைத்து
நானும் ஆறடி
மனிதனாக
நாகரீகம் கருதி
ஆடைகள் தேடிக்கொண்டிருந்தேன்
அப்பொழுது

Friday, February 8, 2008

காதல்(கள்/கல்)

நீந்த தெரியாமல்
கிணற்றை
ரசிப்பது தவறென்று
ஒவ்வொரு முறை கால் தவறி
உள்விழும் பொழுதும்
நினைத்துக் கொள்கிறேன்

Monday, January 21, 2008

தாலாட்டு

உன் புன்னகையொத்து
ஒர் தாலாட்டை
மென்மையாய்
உதிர்க்கின்றாய்

வார்த்தைகள் தெளிவில்லை
அர்த்தமும் விளங்கவில்லை தான்

என்றாலும்
கண்டிப்பாக தெரியும்
அது ஒரு தாலாட்டு என்று

அசையத்தொடங்கியது
ஓர் ஆதியின்
தூளி

உறக்கம் கலையாத
ஓர் குழந்தையின்
புன்னகையும் சாட்சியாய்

நேற்று
இன்று
நாளை
எல்லாம் கனமிழக்க
துயில் கொள்ளத்
துவங்குகிறேன்
அமைதியாய்
ஓர் கருவறையின்
கதகதப்போடு

Friday, January 18, 2008

சொல்

நரம்புகள் இறுகிய
உடலுள்
உயிர்க் குடித்து
மெல்லத் துயில்கொள்ள
இடம் தேடும்
ஓர் அரவம்

பக்கத்தில் இருந்தவளின்
முகம் முலை அக்கறையற்று
பேருந்தின் யன்னலில்
தலைசாய்ந்து வெறிக்கிறேன்
தவமென நீள்கிறது சாலை

பார்வை மறைத்து
இமைகளின் இடுக்கில்
புழுக்கள் நெளிகின்றன
இரவின் நீட்சியாய்

மீண்டும்
உன் உதட்டின் ஈரம் தேடி
அழுகிய
அந்த சொல்லை
நெருங்குகிறது
விரல்கள்

பழகிய நிறுத்தத்தில்
இறங்க
யாரும் சொல்ல
வேண்டியதில்லை



--- இலக்குவண்------

Wednesday, January 16, 2008

நகுலனை-என் நண்பனை-மொழிப்பெயர்த்தல்

இந்தத் தலைப்பைப் பார்த்து என்னைப்பற்றிய உன் பிம்மங்களை நீ உயர்த்திக்கொள்ளலாம் இல்லை மிகவும் தாழத்திக்கொள்ளலாம் அல்லது இருக்கும் எல்லா பிம்மங்களை உடைத்து புதிதாய் ஒன்றையும் உருவாக்கலாம்.அது உன்னைப்பொறுத்தது.அதில் எனக்கு அக்கறை இருந்தாலும் கவலையில்லை
'என்னைத் துரத்திக்கொண்டு
நான் செல்கிறேன்
எல்லோரும் சிரிக்கிறார்கள்'
என்ற என் நண்பனின் (நகுலனின்) வாக்கை வாழ்த்தென நினைத்துக்கொண்டு என்னைத்தொடர்கிறேன். சிரிப்பதோ சிந்திப்பதோ எப்பொழுதும் பின்விளைவுகள் வாழ்வின் மிக சிக்கலான இரகசியம்.

நான் நகுலனை அவனுக்கான இரங்கல் கடிதங்களில் தான் முதலில் சந்தித்தேன்.அது மிகப்பெரிய மகிழச்சியையும் வருத்ததையும் ஒரு சேரத்தந்து இறந்த வீட்டில் எல்லா உறவுகளையும் எதிர் பாராமல் சந்தித்த சிறு பிள்ளையைப் போல் விழி பிதுங்கி நிற்கச்செய்தது.பின் என் இலக்கிய நண்பியின் வார்த்தைகளில் அவனை சற்றே முழுமையாக உருக்கொண்டேன்.அதாவது 'நகுலனின்
கவிதைகள் ஒரு வடிகால்' என்ற அவள் வார்த்தை அவனை என்னுள் உணரச்செய்தது.
நேற்று அவனுடைய 'நகுலனின் கவிதைகள்' (காவ்யா பதப்பகம்)" அவனை எனக்கு நண்பனாக்கியது. இனி அவனை அவன் கவிதைகளை என் வாழ்வியல் வழி மொழிப்பெயர்க்க முயற்சிக்கிறேன்.

மனம் இருப்பின் உடன் வா.உன்னை அழைத்துக்கொண்டு செல்லும் என் விருப்பம் பின்குறிப்பல்ல உள்ளிருப்பு. உடன் வந்து பிழைத்திருத்தலாம் தலையில் குட்டு வைக்கலாம் தகுதியிருப்பின் வாழத்தலாம்

Sunday, January 13, 2008

பாலையின் சுவடுகள் என் மனதில்





அன்புள்ள தேவதைக்கு,

உன் பிரிவின் வலியை கூற விழைந்து எங்கேனும் உன்னை கொலை செய்யும் முயற்சி ஆகிடுமோ என்ற பயத்தோடு இப்படி மௌனம் காக்கிறேன்..

உன்னை பற்றி மட்டுமே நினைத்து கொண்டிருப்பதில்லை. இருந்தும் என்னொடு ஏதோ ஒரு வழியில் உன் பிரிவு வந்துகொண்டுதான் இருக்கிறது.

சற்றே கண்ணுறும் பொழுது ஒரு மௌனமான வலி ஒன்று வெயில் நுழையும் இருள் போல உயிர் நுழைந்து கிழிக்கிறது என் இருப்பை.

கழுத்தில், கன்னத்தில் ,இதயத்தின் ஓரத்தில் ,கால்களில், இறுகும் நெற்றியில் எல்லாமும் நிகழ்கிறது ஒரு வலியின் கண்ணீருக்குறிய தேடல்.

உன் இறுதி வார்த்தைகளும் இந்த நீண்ட மௌனமும் மனதில் எதிரொலியென மீண்டும் மீண்டும் வருகிறது. அதிர்வுகள் நிற்காமல்.

வாழ்கை உனக்கும் எனக்கும் அனைத்தையும் கற்று தந்துகொண்டே இருக்கிறது.அதனால் என் விளக்கம் எதுவும் உனக்கும் உன் விளக்கம் எனக்கும் தேவையில்லை என்று இருவருக்கும் தெரியும்.
இருப்பினும் பல நேரங்களில் எனக்கும் சில நேரங்களில் உனக்கும் ஒரு ஆறுதல் தேவைபடுவது நம் உறவின் இருப்பும் அதன் தேவையுமாய் உணர்கிறேன்.

'நாம் ஆண்டவனின், அவன் வழியில், மிகவும் நேசிக்கபடும் குழந்தைகள்..நாமும் அவனை நேசித்துகொண்டே இருப்போம் நம் வழியில்'

வார்த்தைகளும் அதற்கான அர்த்தங்களும் அனுபவம்தானே தீர்மானிக்கின்றன. நிறைய எழுதவேண்டும்..அதிகம் பேசவேண்டும்..

அந்த பார்வை.சிறு புன்னகை.இறுதியாக எப்பொழுது..தெரியவில்லை...ஏதோ ஒரு விபத்தில்... இனி எப்பொழுது...விபத்தோ..வினையோ..விதியோ...

ஒன்றுமட்டும் நிச்சயம். இந்த மடல் முழுதும் உனக்கு தெரியாத எதையும் பதிவு செய்யவில்லை என்றே தோன்றுகிறதே எப்பொழுதும் போல்.

Saturday, January 12, 2008

குழலோசை




உணர்ச்சிகள் உள்மறைக்கும்
மரங்கள் சூழந்த
காட்டினிடை
உயிரறும் ஓசையெழுப்பி
உருண்டுக்கொண்டிருக்கும
ஓர் மூங்கிலின் எச்சம்
மொழிப்பெயர்க்கிறது
யாருமற்ற நதிக்கரையில்
நிலையென நிற்க
முயற்சித்து நிதம் தோற்று தள்ளாடும்
ஓர் ஓடத்தின் தடுமாற்றத்தை!

தடுத்திருக்க இயலாதுதான்
இருந்தும்
ஒருமுறையேனும்
ஓடமென உருக்கொள்ளும் முன்
சிந்தித்திருக்கலாம்
குறைந்தபட்சம்
விருப்பமற்ற இயல்பான வலிகளை
எதார்த்தமென
ஏற்று மௌனித்திருக்கவும்
அந்தியின் தனித்த குழலோசையொத்த
கழிவிரக்கங்களை தவிற்கவும்

Friday, January 11, 2008

வேண்டுதல்களின் பயன்




மௌனமாய்
கண்கள் மூடுகின்றேன்
உயர்கின்றன ஏக்கத்துடன் ஆயிரம் கரங்கள்
மெல்லிய அசைவுகளுடன் உதடுகள்
திசையெங்கும் வேண்டுதல்களின் சப்தம்

எதிரொலியால் அமைதியிழந்து
விழித் திறக்கின்றேன்
தனிமையைத் தவிர
அங்கு ஏதுமில்லை
கோயிலும் கடவுளும் கூட

கையறுநிலையின் சாட்சியென
வெளியேறிய
விழிநீர்த்துளி
ஒன்றில் மிதக்கின்றன
அந்த ஆயிரம் கரங்கள்

உள்பரவுகிறது ஓர் அமைதி
பிரகாரத்தின் வெயில் போல
மெதுவாய்

இனி
நாட்குறிப்பை மூடிவைத்து
உறங்கலாம்

Monday, January 7, 2008

வாழ்க்கை



நேரம் காலம்
கண்ணியம்
ஏதும் பாராமல்
தன் கழிவை
தோளில் இட்டு
செல்லும்
காகம்!

குணம்



நாயிலிருந்து
பன்றியாக
வால் வளைந்ததை
எண்ணி வருத்தம் கொண்டாலும்
காளையாகி நீண்டதும் மகிழ்ந்தது
பின் குதிரையாகி
யானையாகி
இன்ன பிற விலங்கினமென
தான் மாறி கொண்டிருக்கும்
பொழுதின்
ஓர் ஓய்வுநாளில்
ஆதியில்
வாலில்லாமல்
எப்படி வாழ்ந்தோம்
எண்ணி
ஆச்சரியப்பட்ட
அது ‘அது’வல்ல

பருவங்கள்



கசக்கியெறியப்பட்ட
அந்த தேதியை
மெதுவாய்
பிரித்து பார்க்கிறது
பிஞ்சு விரல்கள்

உள்ளிருக்கும்
நிகழ்வுகளின் குரூரங்கள்
நினைவில் வர
பயந்துப்
பதறி தடுக்க முனைந்தேன்

சிறு கோடுகள்
சில எண்கள்
ஒரு மகிழ்ச்சி
குழந்தையின் கண்களில்
வேறெதுவும் புலப்படவில்லை

வாழ்வியல் எதார்த்தமென
கடந்த காலத்தில்
மற்றொரு துர்நாளில்
அந்த குழந்தை
கசக்கி எறியப்பட்டது
இந்தத் தேதியைப்போல
என்னிலிருந்து

Sunday, January 6, 2008

புதிய நட்பும் வழமையான திருஓடும்




தன்னைக் கடந்து செல்லும்
பெயர் தெரியாத பறவையின்
நிராகரிப்பில்
முறிந்து விழுகிறது
கூடுகளற்ற ஒரு கிளை

கோபம் கொள்ளும் உரிமை
இதுவரை விதைக்கப்படவில்லை
என்பதும் உண்மையே

விழி தேங்கும் கடலை
எனதல்ல எனப் பிதற்றுகிறேன்
கறைமீறி கசியும்
உப்பு நீரில் சவமாகிப் பத்திரப்படுகிறது
ஓர் அன்பு

கால்குறுகி அமர்ந்தபடி
கொலை நிகழ்ந்த அதே இடத்தில்
எந்த பிரக்ஞையுமற்று
நட்சத்திரங்கள் பற்றி கவிதை எழுதிக் கொண்டிருப்பாய்
நட்பு
குருதியின் கறையென
மிஞ்சும் சேலையைப்பற்றிய
கவலையோடும்

உதவியென
வாசல் நிற்கையில்
இனியும் தாமதிக்காது
பரிசளித்து விடு
எனக்கென பத்திரப்படுத்திய
அந்த திருஓட்டை

Wednesday, January 2, 2008

புத்தாண்டின் அசௌகரியங்கள்


வாழ்வின் நடைபழகுதலில்
பார்வை உணராத பள்ளங்களுள்
என் நம்பிக்கைகள் வீழ
சூழலின் முட்களால் கிழிக்கப்பட்டு
திசையெங்கும் சிதறின
முகமூடிகளின் மிச்சங்கள்!

இந்த வன்முறையின் எச்சமென
நகக்கீறல்களின் அடையாளங்களுடன்
காயப்பட்ட முகத்தின்
இறந்த காலத்தழும்புகளில்
மீண்டும் கசியத் தொடங்கிய
கண்ணீர்த் துளிகளை
உண்டு உயிர்த்தன சில வார்த்தைகள்!

புத்தாண்டின் நீட்சியென
புதிய நாட்குறிப்பின் சுகந்தம்
அசௌகரியப்படுத்த,
எழுதப்படவேண்டிய கவிதை ஒன்று
தன்னை விதைக்கவும் இயலாமல்
மறைக்கவும் வழியறியாது
என்னைப் போல்
நடுநிசியின் வீதிகளில்
தனைக்கண்டு குரைக்கும் நாய்களுடன்
உளம் பழக முயற்சிக்கிறது
குறைந்தபட்சம்
தனித்து அலைதலைத் தவிர்க்கவேனும்!