Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Thursday, November 15, 2007

நம் அடையாளங்கள்


வாழ்க்கையின் சில கணங்களில் நாம் நம் அடையாளம் என சிலவற்றை நினைப்போம்.அதையே பின் ஒரு சூழலில் நாம் இல்லை என்று வாதாடுவோம்.காலம் 'நீ யார்' என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கும்.நாமும் அதனிடம் பதில் சொல்லிக்கொண்டே இருப்போம் மாற்றி மாற்றி முன்னுக்குப்பின் முரனாக. கடந்த காலத்து அடையாளங்கள் நிகழ் காலத்திற்கு பெரும்பாலும் பொறுந்துவதில்லை. எல்லாம் கடந்தும் அடி ஆழத்தில் நாம் நாமகவே இருப்பதான உணர்வும் நிலையாய் இருக்கும்.

"தவறு யாருடையது" என்ற என் கவிதையின் உள்ளர்த்தமும் அதுவே.
http://onthewaytoreachme.blogspot.com/2007/11/blog-post_14.html

Saturday, October 6, 2007

நிலையானது வாழ்வு!!!..


சில நிமிடங்களிலோ சில மணித்துளியிலோ சில நாட்களிலோ சில மாதங்களிலோ சில வருடம் கழித்தோ கூட நடக்கலாம் மீண்டும் மீண்டும் அந்த புரிதல்... ஒவ்வொருவர் வாழ்கைக்கும் நிலையானதோர் சுவை உளதென்றும், அது எல்லா அனுபவம் கடந்தும் நிகழ்வுகள் கடந்தும் ஒரே மாதிரி தான் உளதென்றும்..

Sunday, September 30, 2007

நினைவின் அர்த்தங்கள்


சிறு வயது முதலே எனக்குள் ஒரு விருப்பம் உண்டு.வாழ்க்கையை முழுவதுமாய் உணர்ந்து வாழவேண்டும் என்பதே அது. இதை எப்படியோ வாழ்க்கை அறிந்திருக்கிறது .தன்னை உணர நினைப்பதாலேயே என்னை மிகவும் விரும்பி என் ஆசைக்கு துணையாய் வாழ்தலை கற்று தர முனைந்தது. ஆனால் நானோ வாழ்க்கை தன்னை உணர்த்தும் ஒவ்வொரு பொழுதிலும் சிறு கோபம் கொண்டு சிறு தொல்லைகளால் அதன் உணர்வுகளை நிராகரித்திருக்கிறேன். தான், அன்பை எதிர்நோக்கும் ஒருவரிடமிருந்து வரும் நிராகரித்தலின் வலி தாளாமல் ஒரு முடிவிற்கு வந்ததாய் என் அன்புக்கினியவர்களை தேடி அவர்கள் வழியாக தன்னை உணர்த்த முடிவுசெய்தது.ஆனால் நானோ அதன் நாடகத்தை அறிந்தவனாய் எப்பொழுதும்போல் அதன் மேல் கோபம் கொண்டேன். தன் முயற்சி தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் இன்னும் அதிகமான அன்போடும் அக்கறையோடும் என்னை தேடி ஏதோ ஒரு பாசத்திற்குறிய முகத்தின் வழியே வந்து கொண்டுதான் இருக்கிறது,தன் முயற்சியின் உள்நோக்கத்தை, உள்ளன்பை உணராமல் கோபம் கொள்ளும் என்னை தொடர்ந்தபடி.பாவம் அதன் நிலைமை பரிதாபத்திற்குறியதாகவே உணர்கிறேன்.


ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்..என்னைப்போல் தான் (என்) வாழ்க்கையும்..:-)

Thursday, September 27, 2007

கனவின் அர்த்தங்கள்..





"வயல் வெளியில் சிறு பறவை
விதைக்கிறதே பல கனவை!"



எழுதியவன் என்னை அறிந்திருந்தால் வார்த்தைகள் அர்த்தபடுத்த ஒருவன் இருப்பதை கண்டு வியந்திருப்பான். இது கர்வம் அல்ல. நான். அவ்வளவே. என் பார்வையின் எல்லா திசைகளிலும் கனவுகளை விதைத்துகொண்டே இருக்கிறேன். (ஒரு விதைப்பின் இடைவெளியில் கவனிக்கபடாமல் மற்றுமொரு விதையின் வாடுதல் நிகழ்ந்துவிடுவதை தடுக்க இயலவில்லை தான். :-(. இருந்தும் தொடர்கிறேன்). இதோ திங்கள் அன்று தமிழ் இலக்கியம் பயிலும் என் ஆசையை விதைத்திருக்கிறேன். பள்ளியில் படித்த காலத்திலே ஒரு காதலின் தேவையால் கவிதை எழுதுவதும் தமிழ் மீது அதிக ஈடுபாடும் ஏற்பட்டதை பற்றி நினைத்து பார்க்கிறேன். :-).
என் கவிதை மேல் எனக்கு ஒரு அதீத மரியாதை உண்டு. அதனாலேயே . என் கவிதை தோற்றால் என்னால் ஏற்க இயலாது.:-). ஒரு குடியரசு தின விழாவில் நடந்த கவிதை போட்டியில் தோற்று விட கூடாதென பெயர் அளிக்காதிருந்த என்னை, நண்பர்கள் கட்டாய படுத்தி மேடை ஏற்றினர். மாவட்ட அளவில் நடந்த அந்த போட்டியில் முதலாவதாக வந்ததும் என் இல்லத்தில் அதை சொல்ல யாரும் நம்ப மறுத்ததையும் என் வாழ்வின் மிகுந்த மகிழ்ச்சி நிரம்பிய தருணங்களாக உணர்கிறேன். அப்பொழுது கூட கிளிப்பிள்ளை போல் உன் ஆசை என்ன என்றால் 'பொறியாளர்' என்றே சொல்லிவந்தேன். பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பாட திட்டம் பார்த்து அதில் 'தமிழ்' ஏன் இல்லை என்று யாரிடம் கேட்க என்று தெரியாமல் விழித்தேன். என்னை போல் யாரும் விழித்திருக்கலாம். ஆனால் அடையாளம் தெரியவில்லை இன்று வரை. இருந்தும் அப்பொழுதும் காதல் கடிதம் எழுதவும் கவிதைகள் எழுதவும் எனக்கு தெரிந்த தமிழே போதுமானதாக இருந்தது.:-))). என் மீது தமிழுக்கும் தமிழ் மேல் எனக்கும் காதல் எனக்கே தெரியாமல் இருந்துவந்ததை நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை.. அந்த நாட்களில் தான் காதலுக்காக மட்டும் அபத்தமாய்(!) எழுதிக்கொண்டிருந்த என் விரல்கள் என் வலிகளுக்கும் கவிதை எழுத முயன்றது. தன்மானங்களை அழிக்கும் திறம் கொண்ட என் கண்ணீர் துளிகளால் கூட என் கவிதையின் வார்த்தைகளை அழிக்க முடிந்ததில்லை. தேர்வின் முடிவு தந்த வருத்தத்தை பதிவு செய்ய முயன்று சர்ச்சைக்கு உள்ளான ஒரு கவிதையும் உண்டு.(தேடிகொண்டிருக்கிறேன்.கிடைத்ததும் இங்கு பதிவிடுகிறேன்). கல்லூரி முடிந்து வேலையற்ற நாட்களிலும் விரிவுரையாளராக பணியாற்றிய நாட்களிலும் கவிதையும் தமிழும் சற்றே ஒதுங்கி நின்றது.இதோ இப்பொழுது இந்த அலுவலக வாழ்க்கையில் கவிதைக்கென்று இடம் அதிகம் ஒதுக்கவில்லை என்றாலும் எனக்கும்
என் தேவதைக்குமான

கடித பரிமாற்றமே கவித்துவமும் வலியும் நிரம்பியவை. அவ்வழியில் தமிழ் என்னுள் ஒரு மிக பெரிய தாகத்தையும் தவிப்பையும் ஏற்படுத்தின.என் வாழ்வியலில் தமிழுக்கென்று தனி இடம் வேண்டும் என்ற உணர்வு மேலிட்டது. வலைப்பதிவுகளில் அறிமுகமாகி 2 ஆண்டுகள் ஆகியும் தமிழ்மணம் அறிமுகமான இந்த இரண்டு மாதங்களில் தான் நிறைய தமிழ் இலக்கியவாதிகளின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.என்னை அடையாளப்படுத்தும் ஆவல் அதிகரித்தது. உணர்வுகளை உருக்கி வார்த்தைகளாக்கும், மானசீக குருவாக நான் ஏற்றுக்கொண்ட தமிழ்நதி, நான் புதிதாக சேர்ந்த வகுப்பில் ஏற்கனவே முதல் மாணவியாக சிறந்து விளங்கும் காயத்திரி ,என் கவிதைகளில் நான் செய்ய விரும்பாத தொடர்ந்து நிகழ்த்தும் எழுத்துப்பிழைகளை பொறுமையுடன் சொல்லும் மஞ்சூர் ராசா

என எண்ணிக்கையில் மிக சிறிய ஆனாலும் அர்த்தம் மிகுந்த என் வலையுளக நண்பர்களிடம் இந்த பதிவின் மூலம் வாழ்த்துதல் பெற விழைகிறேன்.


பி.கு :
நான் இன்று தமிழை என் உணர்வு சார்ந்த ஓர் உயிராக பார்க்கிறேன். என்னை உலகில் மதிக்கும் மற்றுமோரு ஆன்மாவாகவும்.மேலும் கல்வி மனிதனை உருவாக்கும் என்பதை நான் ஏற்பதில்லை.வாழ்வியலில் நம் தேவைகளுக்கு அதுவும் ஒரு கருவி / ஒரு வழி அவ்வளவே. இலக்கியம் பயில்வதன் மூலம் என் எண்ணங்களை ,உணர்வுகளை மேலும் தெளிவாக பதிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் சங்க இலக்கியங்களுக்குறிய அழகின் இரகசியம் அறியும் முயற்சியுமே இது,...