Thursday, September 27, 2007

கனவின் அர்த்தங்கள்..





"வயல் வெளியில் சிறு பறவை
விதைக்கிறதே பல கனவை!"



எழுதியவன் என்னை அறிந்திருந்தால் வார்த்தைகள் அர்த்தபடுத்த ஒருவன் இருப்பதை கண்டு வியந்திருப்பான். இது கர்வம் அல்ல. நான். அவ்வளவே. என் பார்வையின் எல்லா திசைகளிலும் கனவுகளை விதைத்துகொண்டே இருக்கிறேன். (ஒரு விதைப்பின் இடைவெளியில் கவனிக்கபடாமல் மற்றுமொரு விதையின் வாடுதல் நிகழ்ந்துவிடுவதை தடுக்க இயலவில்லை தான். :-(. இருந்தும் தொடர்கிறேன்). இதோ திங்கள் அன்று தமிழ் இலக்கியம் பயிலும் என் ஆசையை விதைத்திருக்கிறேன். பள்ளியில் படித்த காலத்திலே ஒரு காதலின் தேவையால் கவிதை எழுதுவதும் தமிழ் மீது அதிக ஈடுபாடும் ஏற்பட்டதை பற்றி நினைத்து பார்க்கிறேன். :-).
என் கவிதை மேல் எனக்கு ஒரு அதீத மரியாதை உண்டு. அதனாலேயே . என் கவிதை தோற்றால் என்னால் ஏற்க இயலாது.:-). ஒரு குடியரசு தின விழாவில் நடந்த கவிதை போட்டியில் தோற்று விட கூடாதென பெயர் அளிக்காதிருந்த என்னை, நண்பர்கள் கட்டாய படுத்தி மேடை ஏற்றினர். மாவட்ட அளவில் நடந்த அந்த போட்டியில் முதலாவதாக வந்ததும் என் இல்லத்தில் அதை சொல்ல யாரும் நம்ப மறுத்ததையும் என் வாழ்வின் மிகுந்த மகிழ்ச்சி நிரம்பிய தருணங்களாக உணர்கிறேன். அப்பொழுது கூட கிளிப்பிள்ளை போல் உன் ஆசை என்ன என்றால் 'பொறியாளர்' என்றே சொல்லிவந்தேன். பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பாட திட்டம் பார்த்து அதில் 'தமிழ்' ஏன் இல்லை என்று யாரிடம் கேட்க என்று தெரியாமல் விழித்தேன். என்னை போல் யாரும் விழித்திருக்கலாம். ஆனால் அடையாளம் தெரியவில்லை இன்று வரை. இருந்தும் அப்பொழுதும் காதல் கடிதம் எழுதவும் கவிதைகள் எழுதவும் எனக்கு தெரிந்த தமிழே போதுமானதாக இருந்தது.:-))). என் மீது தமிழுக்கும் தமிழ் மேல் எனக்கும் காதல் எனக்கே தெரியாமல் இருந்துவந்ததை நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை.. அந்த நாட்களில் தான் காதலுக்காக மட்டும் அபத்தமாய்(!) எழுதிக்கொண்டிருந்த என் விரல்கள் என் வலிகளுக்கும் கவிதை எழுத முயன்றது. தன்மானங்களை அழிக்கும் திறம் கொண்ட என் கண்ணீர் துளிகளால் கூட என் கவிதையின் வார்த்தைகளை அழிக்க முடிந்ததில்லை. தேர்வின் முடிவு தந்த வருத்தத்தை பதிவு செய்ய முயன்று சர்ச்சைக்கு உள்ளான ஒரு கவிதையும் உண்டு.(தேடிகொண்டிருக்கிறேன்.கிடைத்ததும் இங்கு பதிவிடுகிறேன்). கல்லூரி முடிந்து வேலையற்ற நாட்களிலும் விரிவுரையாளராக பணியாற்றிய நாட்களிலும் கவிதையும் தமிழும் சற்றே ஒதுங்கி நின்றது.இதோ இப்பொழுது இந்த அலுவலக வாழ்க்கையில் கவிதைக்கென்று இடம் அதிகம் ஒதுக்கவில்லை என்றாலும் எனக்கும்
என் தேவதைக்குமான

கடித பரிமாற்றமே கவித்துவமும் வலியும் நிரம்பியவை. அவ்வழியில் தமிழ் என்னுள் ஒரு மிக பெரிய தாகத்தையும் தவிப்பையும் ஏற்படுத்தின.என் வாழ்வியலில் தமிழுக்கென்று தனி இடம் வேண்டும் என்ற உணர்வு மேலிட்டது. வலைப்பதிவுகளில் அறிமுகமாகி 2 ஆண்டுகள் ஆகியும் தமிழ்மணம் அறிமுகமான இந்த இரண்டு மாதங்களில் தான் நிறைய தமிழ் இலக்கியவாதிகளின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.என்னை அடையாளப்படுத்தும் ஆவல் அதிகரித்தது. உணர்வுகளை உருக்கி வார்த்தைகளாக்கும், மானசீக குருவாக நான் ஏற்றுக்கொண்ட தமிழ்நதி, நான் புதிதாக சேர்ந்த வகுப்பில் ஏற்கனவே முதல் மாணவியாக சிறந்து விளங்கும் காயத்திரி ,என் கவிதைகளில் நான் செய்ய விரும்பாத தொடர்ந்து நிகழ்த்தும் எழுத்துப்பிழைகளை பொறுமையுடன் சொல்லும் மஞ்சூர் ராசா

என எண்ணிக்கையில் மிக சிறிய ஆனாலும் அர்த்தம் மிகுந்த என் வலையுளக நண்பர்களிடம் இந்த பதிவின் மூலம் வாழ்த்துதல் பெற விழைகிறேன்.


பி.கு :
நான் இன்று தமிழை என் உணர்வு சார்ந்த ஓர் உயிராக பார்க்கிறேன். என்னை உலகில் மதிக்கும் மற்றுமோரு ஆன்மாவாகவும்.மேலும் கல்வி மனிதனை உருவாக்கும் என்பதை நான் ஏற்பதில்லை.வாழ்வியலில் நம் தேவைகளுக்கு அதுவும் ஒரு கருவி / ஒரு வழி அவ்வளவே. இலக்கியம் பயில்வதன் மூலம் என் எண்ணங்களை ,உணர்வுகளை மேலும் தெளிவாக பதிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் சங்க இலக்கியங்களுக்குறிய அழகின் இரகசியம் அறியும் முயற்சியுமே இது,...




2 comments:

தமிழ்நதி said...

அன்புள்ள நண்பருக்கு, உங்கள் பதிவை வாசித்தபோது என்னைக் குறித்த வரிகள் வந்தபோது எல்லா மனிதருக்கும் உரியதான மகிழ்வு உண்டானது உண்மையே. ஆனால்,தகுதியற்ற ஒன்றை அடையும்போது இயல்பாகவே ஏற்படும் கூச்சம் அதை மறுத்துரைக்கச் சொல்கிறது. மிக அண்மையில் அப்படியொரு கெளரவம் கிடைத்தது. அதை யாரிடமும் வெளியில் சொல்லவில்லை. காரணம் அதே கூச்சம்தான். இப்போது நீங்களும்... இதை யாரேனும் கவனித்துக்கொண்டிருந்து என்னை எள்ளுவார்களோ என்று கவலையுறுகிறேன். நானும் வளர்வேன்- உங்கள் வார்த்தைகளுக்கு ஓரளவேனும் பொருந்துவேன். அப்போது சொல்லுங்கள் சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறேன். எது எவ்வாறு இருப்பினும் அன்பிற்கு நன்றி.

LakshmanaRaja said...

உங்கள் வார்த்தைகளோடு என்னால் போட்டியிட இயலாது. எனினும் தாங்கள் தான் என் குரு. பதிலுக்கு நன்றி.